தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி, துரோகம் குறித்து மனம் திறந்த ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்திருந்த இவர், தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் மதுர் பந்தார்க்கரின் தி வைவ்ஸ் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில், தனது காதல் உறவு 2020-ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்ததாகவும், அந்த உறவில் ஏற்பட்ட துரோகம் தன்னை மனதளவில் பெரிதும் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்காக, சிறிது காலம் வேறு எந்த உறவிலும் ஈடுபட வேண்டாம் என முடிவெடுத்ததாகக் கூறியுள்ளார். தனது நேரத்தையும் கவனத்தையும் தனக்காகச் செலவிட வேண்டும் என நினைத்தபோது கொரோனா ஊரடங்கு தொடங்கியதால், அந்தக் காலத்தை சுய அன்புக்கும் தன்னைக் கவனித்துக் கொள்வதற்கும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று மனதளவில் தெளிவான நிலையை அடைந்ததற்கு அந்த முடிவே முக்கியக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் பலரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட தவறான அனுபவங்களைச் சந்திப்பதாகக் கூறிய ரெஜினா, காதலில் ஏற்படும் துரோகமும் பல பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான அனுபவம் என்றார். இதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கு மட்டுமே நடப்பதாக நினைக்காமல், பெண்கள் தங்களது அனுபவங்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க்கையில் வலியைச் சந்திக்கும்போது அழ வேண்டும் எனத் தோன்றினால் மனதார அழலாம் என்றும், அதற்காகத் தங்களைத் தாங்களே குறை சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். நடந்த சம்பவத்திலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான அன்பையும் அக்கறையையும் முதலில் தங்களுக்குத் தாங்களே வழங்க வேண்டும் என்றும் ரெஜினா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply