மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், “தேவரா” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக “பெத்தி” படத்தில் நடித்தார். இப்படத்தில் ஜான்வியின் கதாபாத்திரம், உடைகள் மற்றும் காட்சிகள் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகப் படம் வெளியான பிறகு சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இயக்குநர் புச்சி பாபு சனா வருத்தம் தெரிவித்ததாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், “காபி வித் கரண்” நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரிடம் இப்படத்தின் சர்ச்சை குறித்து தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜான்வி, படத்திற்காகப் பலரும் கடுமையாக உழைத்திருந்ததால் இந்த விவகாரம் குறித்து பேசத் தயங்கியதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சர்ச்சையில் தனக்கும் பங்கு இருப்பதால் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், பெண்கள் தொடர்பான கதைக்களம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் தனது மனசாட்சியை உறுத்துவதாகவும் கூறினார். பெண்களைப் பாலியல் ரீதியாகப் பண்டமாகச் சித்தரித்ததும், பாலியல் வன்கொடுமையை இயல்பானதாகக் காட்டியதும் சிக்கலான அம்சங்கள் என ஒப்புக்கொண்ட அவர், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதே தன்னால் செய்யக்கூடியது என்றார்.
