லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பில் செந்தில்முருகன் தயாரிப்பில், பாலு நாராயணன் இயக்கியுள்ள படம் ‘சிட்டா’. இதில் சிபி கதாநாயகனாகவும், ஆராத்யா சாய் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஆதியா பிரசாத், பாலசரவணன், மூர்த்தி, மதுமிதா, அருவி மதன், செந்தில்முருகன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வாசுதேவன் ஒளிப்பதிவு செய்ய, டி.சி. இசையமைத்துள்ளார்.
படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பாலு நாராயணன் கூறுகையில், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு விவரங்களைப் பதிவு செய்வதில் கிராம நிர்வாக அலுவலகம் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். கிராம நிர்வாகம் சீர்குலைந்தால் மாநில நிர்வாகமும் பாதிக்கப்படும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறச் சூழலில், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து இயல்பாகப் படமாக்கியுள்ளதாக இயக்குநர் கூறினார். நிலத்துக்குப் பட்டா, சிட்டா பெறுவதற்காகச் சாதாரண மக்கள் சந்திக்கும் சிரமங்களே இப்படத்தின் மையக்கருவாகும். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டார்.
