‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை நடிகர் பகவதி பெருமாள், தனது நகைச்சுவையான நினைவுகளுடன் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்தை மிரட்டும் உள்ளூர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், தற்போது ரசிகர்களிடையே மீண்டும் கவனம் பெற்று வருகிறார்.
படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த பக்ஸ், “ஒரு காட்சியில் ரஜினி சார் என்னைக் கீழே தள்ளிவிட்டு, என் நெஞ்சில் காலை வைத்து மிதிக்க வேண்டும். நான் கீழே விழும் விதம் இயல்பாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் நெல்சன் விரும்பினார். ஆனால் ஆறு, ஏழு டேக்குகள் எடுத்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை.
நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றிருந்தேன். அப்போது அவர் சொல்லிக் கொடுத்த ஒரு நுட்பத்தை இந்தக் காட்சியில் பயன்படுத்தலாமா என்று நெல்சன் மற்றும் ரஜினி சார் முன்னிலையில் தெரிவித்தேன். ஆனால் நெல்சன் அதைக் கவனிக்கவில்லை. அடுத்த டேக்கும் சரியாக அமையாததால், நேரம் முடிந்துவிட்டது எனப் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்கள்.
அப்போது என்னிடம் வந்த ரஜினி சார், ‘பாண்டியன் மாஸ்டரிடம் வித்தை கற்றவரா நீங்கள்?’ என்று கேட்டார். பின்னர் நெல்சனை அழைத்து, ‘இவர் பாண்டியன் மாஸ்டரிடம் பயிற்சி எடுத்தவராம். ஆனால் எட்டாவது டேக் எடுக்கும்போதுதான் அதை வந்து சொல்கிறார் பாருங்கள்’ என்று என்னைக் கிண்டல் செய்தார். ரஜினி சார் என்னை அப்படிக் கிண்டல் செய்ததை மகிழ்ச்சியுடன் ரசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
