தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா சரண். தமிழில் ‘சிவாஜி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘கந்தசாமி’, ‘குட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். திருமணத்துக்குப் பிறகு சில காலம் படங்களில் நடிப்பதைக் குறைத்திருந்த அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ரேயா சரண், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிப் பரப்புவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். “சில நேரங்களில் அது நான்தானா என்றே தெரியவில்லை” என்று குறிப்பிட்ட அவர், ஏஐ மூலம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் தனியுரிமையையும் கண்ணியத்தையும் பாதிக்கக் கூடாது என வலியுறுத்தினார். ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலிப் புகைப்படங்கள் உண்மையானவை போலத் தெரிவதால், அவற்றை அடையாளம் காண்பதும் கடினமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த அவரது கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
