“வாழ்க்கையில் எதுவும் முடிவல்ல… ‘ஒன் மோர்’ வாய்ப்பு இருக்கிறது” – மாணவர்களுக்கு சூர்யா அட்வைஸ்!

சென்னையின் தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில், ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியுதவியுடன் விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பணியாற்றும் மூன்று அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “இது எங்களுக்கு ஒரு குடும்ப நிகழ்ச்சி. 47 ஆண்டுகளாக அப்பாவின் வழிகாட்டுதலுடன் இதைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் முதல் தலைமுறை மாணவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேரை எங்களால் சென்றடைய முடிந்துள்ளது. கல்வி இடைநிற்றலைச் சந்திக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, இஸ்லாமிய சமூகத்தினர், மலைக் கிராமங்கள், கடலோரப் பகுதிகள் எனப் பல இடங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இன்னும் உதவி தேவைப்படும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய அவர், “சினிமாவில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால், பலமுறை ‘ரீடேக்’ எடுப்போம். ஒவ்வொரு முறையும் இயக்குநர் ‘நீ தோல்வியடைந்துவிட்டாய்’ என்று சொல்லாமல், ‘ஒன் மோர்’ என்று இன்னொரு வாய்ப்பு கொடுப்பார். வாழ்க்கையும் அப்படித்தான். நீங்கள் தோல்வியடைந்துவிட்டதாக நினைக்கலாம்; ஆனால் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடுவதில்லை. மதிப்பெண்ணாக இருந்தாலும், கல்லூரி இடமாக இருந்தாலும், முதல் வேலையாக இருந்தாலும் திருப்தி இல்லையென்றால் அதுவே முடிவல்ல. இன்னொரு முறை முயற்சி செய்யுங்கள்; இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். ‘ஒன் மோர்’ என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் கலைஞர்கள், மாணவர்கள், அகரம் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading