Advertisement

“என் பேரனே ஹிப் ஹாப் ஆதியின் ரசிகர்! – மீசைய முறுக்கு 2 விழாவில் தேவா சுவாரஸ்ய பேச்சு!

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் தேவா, ஹிப் ஹாப் ஆதி குறித்தும், தமிழ் சினிமாவில் கானா இசையை அறிமுகப்படுத்திய தனது பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஹிப் ஹாப் ஆதி மக்களின் ரசனையை நன்றாக புரிந்து வைத்திருப்பதாக கூறிய தேவா, அவர் உருவாக்கும் பாடல்கள் கோடிக்கணக்கான பார்வைகளை பெறுவது அதற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு என குறிப்பிட்டார். தனது குடும்பத்தில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும், தனது பேரன் ஹிப் ஹாப் ஆதியின் தீவிர ரசிகர் என்றும், அவரது புகைப்படத்தையே தனது செல்போனில் வைத்திருப்பதாகவும் கூறினார். ‘மீசைய முறுக்கு 2’ படத்தையும் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்ததாக தேவா தெரிவித்தார்.

பின்னர் தனது ஆரம்பக் கால கட்டத்தை நினைவுகூர்ந்த அவர், தனது இசை பயணத்தில் ஒரு பகுதியாகத்தான் கானா பாடல்களை சினிமாவுக்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். அந்த காலகட்டத்தில் இவ்வகை பாடல்கள் ‘பிளாட்பார்ம் சாங்’ என்று அழைக்கப்பட்டதாகவும், சென்னையின் நாட்டுப்புற இசை வடிவமாக இருந்த கானாவை திரைப்படங்களில் பயன்படுத்தத் தொடங்கியதாகவும் கூறினார்.

வடசென்னையைச் சேர்ந்த பல கானா கலைஞர்களும் இந்த இசை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்ட தேவா, தான் மந்தைவெளி மற்றும் மயிலாப்பூரில் வசித்த காலத்தில் பல கானா பாடகர்களுடன் நட்பு வைத்திருந்ததாக தெரிவித்தார். அவர்களின் பாடல்களை சினிமாவுக்கு கொண்டு வந்ததாகவும், ஆண்டனி, அல்போன்ஸ் உள்ளிட்டோரும் கானா பாடகர்களாக இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். ‘மீசைய முறுக்கு 2’ படத்தை பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளில் உணர்ச்சிவசப்பட்டதாகவும் தேவா தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Add a Comment

Leave a Reply