“எந்த மனக்கசப்பும் இல்லை!” – சிவகார்த்திகேயன் உடனான படம் குறித்த விமர்சனங்களுக்கு வெங்கட்பிரபு முற்றுப்புள்ளி!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளிலும் வெங்கட்பிரபு ஈடுபட்டு வந்தார்.ஆனால், சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ படத்தில் நடித்து வருவதுடன், ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் தனது 27வது படத்திலும் நடிக்க உள்ளார். இதனால் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பாக வெங்கட்பிரபுவின் தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்த கருத்துகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன. இதையடுத்து தற்போது வெங்கட்பிரபு தனது தரப்பு விளக்கத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், சிவகார்த்திகேயன் தனக்கு எப்போதும் அன்பான நண்பர் மற்றும் சகோதரரைப் போன்றவர். படம் தொடர்பாக பல்வேறு யூகங்களும் சர்ச்சைகளும் பேசப்பட்டு வரும் நிலையில், ஒரு தந்தையாக தனது மகன் சம்பந்தப்பட்ட படம் தாமதமாகும்போது அவருக்கு விரக்தி ஏற்பட்டிருப்பது இயல்பானது என்றும், முழு சூழலும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரை குறை சொல்ல முடியாது என்றும் வெங்கட்பிரபு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழில் சார்ந்த விஷயங்களை யாரிடமும் விரிவாகப் பேசும் பழக்கம் தனக்கு இல்லை என்றும், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தை தொடங்க முடியாமல் போனதே தவிர இதில் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்காலத்தில் சரியான நேரமும் நல்ல கதையும் அமையும் பட்சத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நான் எனது அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், எனது சகோதரர் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply