பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.
கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘டிராகன் 2’ குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த சூழலில், ‘டிராகன் 2’ படத்தின் நடிகர்கள் தேர்வு தொடர்பான சில போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. குறிப்பாக படத்தின் கதாநாயகி மற்றும் குழந்தை நட்சத்திரம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் அந்த போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்றும், அவை தயாரிப்புக் குழுவால் வெளியிடப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ‘டிராகன் 2’ படத்தின் கதாநாயகி அல்லது குழந்தை நட்சத்திரம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.அங்கீகரிக்கப்படாத தகவல்களை ரசிகர்கள் நம்பவோ, பகிரவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ஏஜிஎஸ் நிறுவனம், தங்களது படங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட சமூக வலைதள பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
