‘மொத ராத்திரி’ வெற்றியால் கிடைத்த எதிர்பாராத அனுபவம்! இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்த நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்த ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படம் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

படத்தின் வெற்றிக்குப் பிறகு தனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றையும் ராஜா கருப்பசாமி பகிர்ந்துள்ளார். படம் வெளியான பிறகு ஒரு நாள் ஆட்டோவில் பயணம் செய்தபோது, இறங்கிய நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கட்டணம் வாங்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார். படம் பிடித்திருந்ததாகவும், அடுத்தடுத்தும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறி பணம் வாங்காமல் அனுப்பியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் படம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதற்கு அந்த சம்பவமே தனக்கு ஒரு அடையாளமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘மொத ராத்திரி’ படத்தில் அவரே நடித்திருப்பது குறித்தும் ராஜா கருப்பசாமி விளக்கம் அளித்துள்ளார். நடிப்பதில் தனக்கு ஆர்வம் இருந்தாலும், தான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த நடிகரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், இறுதியில் அந்த கதாபாத்திரத்தில் தானே நடித்ததாக கூறியுள்ளார்.

தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் ராஜா கருப்பசாமி, அடுத்ததாகவும் கிராமத்து பின்னணியிலான கதையையே இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் புதுமுக நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும், அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply