‘சீன்’ படத்திற்காக சண்டைக் காட்சிகளில் அசத்திய நஸ்ரியா… ஸ்டண்ட் இயக்குனர் பாராட்டு!

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் சீன். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில்நடிகை நஸ்ரியா தனது வழக்கமான நடிப்புப் பாணியிலிருந்து விலகி அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சியையும் காட்டிய ஈடுபாட்டையும் படத்தின் சண்டைப் பயிற்சி இயக்குநர் சேத்தன் டி’சோசா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சண்டைப் பயிற்சிப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சேத்தன் டி’சோசா, நஸ்ரியாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பற்றியும் பதிவிட்டுள்ளார். பயிற்சியின்போது அவர் எந்தவிதமான புகார்களையும் தெரிவிக்காமல், ஒவ்வொரு புதிய விஷயத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முன்வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நஸ்ரியாவின் இந்த அணுகுமுறை தனது பணியை மிகவும் எளிதாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை ரசிகர்களால் ‘எக்ஸ்பிரஷன் குயின்’ என ரசிக்கப்பட்ட நஸ்ரியா, தற்போது ‘ஆக்ஷன் குயின்’ என்ற புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் சேத்தன் டி’சோசா தனது பாராட்டில் குறிப்பிட்டுள்ளார். தனக்குக் கிடைத்த இந்தப் பாராட்டுக்கு நஸ்ரியாவும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். “மாஸ்டர் என்னால் உண்மையிலேயே இவற்றையெல்லாம் செய்ய முடியும் என்று எப்படி நம்புகிறார் என எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply