சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு குறித்து பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார். இந்தியாவின் ஆஸ்கர் தேர்வுகளில் தொடர்ந்து தவறான படங்கள் தேர்வு செய்யப்படுவதாக அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார். தகுதியான படங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தும், அதனை பயன்படுத்தாமல் தவறவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ‘கோந்தல்’ திரைப்படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்பதால் அந்தப் படத்தின் தரம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அனுராக் காஷ்யப் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக விளம்பரங்களுக்காக பணம் செலவிடுவது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ‘கோந்தல்’ இயக்குநர் சந்தோஷ் பதிலளித்துள்ளார். அனுராக் காஷ்யப் மீதும் அவரது படைப்புகள் மீதும் தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக கூறிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் மும்பை விமானப் பயணத்தின் போது அவரை சந்தித்து ‘கோந்தல்’ படத்தைப் பற்றி பேசியதாக தெரிவித்தார். அப்போது படம் குறித்து கேள்விப்பட்டதில்லை என்று கூறிய அனுராக் காஷ்யப், படத்தை கண்டிப்பாக பார்ப்பதாக தெரிவித்ததாகவும் சந்தோஷ் கூறியுள்ளார்.மேலும், எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்பு முதலில் படத்தை பார்த்துவிட்டு விமர்சிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சினிமா பின்னணி எதுவும் இல்லாத அறிமுக இயக்குநராக, மராத்தி கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த த்ரில்லர் படத்தை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
