திஷா பதானி தனது திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களாலும் அடிக்கடி கவனம் பெறுபவர். சமீபத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் அவர் அணிந்திருந்த உடை தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆன்மிக நிகழ்வில் இப்படியான உடை தேவையா என்ற கருத்துகளும் சில தரப்பினரிடமிருந்து முன்வைக்கப்பட்டன.
இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து திஷா பதானி தற்போது தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நடிகையாக தனது பயணத்தை சரியான முறையில் தொடர்ந்து வருவதாகக் கூறிய அவர், பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் என்றாலே விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்தார்.
தனக்கு எதிராக ஒரு கூட்டமே தொடர்ந்து விமர்சித்து வருவதாக உணர்வதாக கூறிய திஷா, சாதாரண விமர்சனங்களை தன்னால் எளிதாக கடந்து செல்ல முடியும் என்றும், ஆனால் தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையிலான விமர்சனங்கள் மனதை பாதிப்பதாகவும் குறிப்பிட்டார். தான் அணியும் ஒவ்வொரு உடைக்கும் ஒரு காரணத்தை உருவாக்கி விமர்சிப்பதாகவும், இதுபோன்ற விமர்சனங்கள் தனக்கு புதிதல்ல என்றும் கூறினார்.
மேலும், தான் யாருடன் பேசினாலும், யாருடன் பழகினாலும் அதனை வைத்து பல்வேறு விதமாக பேசுவதாகவும் திஷா தெரிவித்தார். நல்ல விமர்சனங்களையும் பயனுள்ள அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராக இருப்பார்கள் என்றும், ஆனால் அறிவுரை என்ற பெயரில் விஷமமான எண்ணங்களுடன் தனிப்பட்ட தாக்குதல்களை முன்வைப்பவர்கள்தான் கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.இதனால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலையையும் மற்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திஷா, வழக்கம்போல் இந்த விமர்சனங்களையும் கடந்து செல்ல முயற்சிப்பதாகவும், தனது வலிகளை தனக்குள்ளேயே வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
