கத்ரீனா கைஃப் மீதான விமர்சனங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பதிலடி கொடுத்த சல்மான் கான்!

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த கத்ரீனா கைஃப், சமீபத்தில் மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் கணவர் விக்கி கவுசலுடன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோது, கத்ரீனா கைஃப்பின் உடல் தோற்றம் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் கேலிக் கருத்துகளையும் பதிவிட்டனர். இதற்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கத்ரீனாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான கருத்துகள் தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், இந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்ற சல்மான் கான், பெண்களின் உடல் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் பற்றி பேசியுள்ளார். கர்ப்பத்துக்குப் பிறகு பொதுவெளிக்கு வரும் பெண்களின் உடல் மாற்றங்களை வைத்து அவர்களை மோசமாக விமர்சிப்பது எந்த வகையிலும் சரியல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கர்ப்பத்துக்குப் பிறகு பெண்கள் தங்களது பழைய உடல் தோற்றத்துக்கு திரும்புவார்கள் என்றும், அவர்கள் விரும்பினால் மீண்டும் உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்வார்கள் என்றும் சல்மான் கான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தனக்கு தற்போது 60 வயதாகிவிட்ட நிலையில், இளமைக்காலத்தில் ‘மைனே பியார் கியா’ படத்தில் இருந்த அதே உடல் தோற்றத்துடன் எப்போதும் இருக்க முடியாது என்றும் தனது உதாரணத்தை குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply