கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராகவும், அவருக்கு எதிராக வாதிடும் மற்றொரு வழக்கறிஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர். மேலும், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல் தோற்றப் போஸ்டர் வெளியிடப்பட்டது. முதலில் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இப்படத்தின் டீசர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சக்கரை பெண்ணே’ பாடலும் வெளியாகியுள்ளது. பிரவீன் எஸ். விஜய் எழுதியுள்ள இப்பாடலை தீப்தி சுரேஷ் பாடியுள்ளார்.
