ஷ்ரத்தா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “ஈதா” (Eetha) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. மேடாக் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை லஷ்மண் உடேகர் இயக்கியுள்ளார். முதலில் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 4-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் ஷ்ரத்தா கபூர், மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற லாவணி கலைஞர் விதாபாய் நாராயண்காவ்ங்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரந்தீப் ஹூடா மற்றும் முகமது ஜீஷன் ஆயுப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
விதாபாய், லாவணி மற்றும் தமாஷா கலைகளின் மூலம் மகாராஷ்டிராவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். நாட்டுப்புறக் கலைக்கான பங்களிப்புக்காக குடியரசுத் தலைவரிடமிருந்து விருதுகளும் பெற்றுள்ளார். “ஸ்ட்ரீ 2” வெற்றிக்குப் பிறகு ஷ்ரத்தா கபூர் நடிக்கும் இந்தப் படம், அவரது திரைப் பயணத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை தேசிய விருது பெறாத அவர், “ஈதா” மூலம் அதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் பாலிவுட் வட்டாரத்தில் நிலவுகிறது.
