ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் சூரி, பெண்களின் பங்களிப்பு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். “அம்மா, மகள், சகோதரி, மனைவி… எந்த வடிவில் இருந்தாலும் பெண்கள்தான் குடும்பத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தி” என்று அவர் கூறினார்.
மேலும், “பெண் ஒருவர் உயரும்போது, அவர் மட்டும் உயர்வதில்லை. பல பெண்களின் கனவுகளும் சேர்ந்து உயர்கின்றன. இந்த விருது அவர்களுக்கான மேடையாக நான் பார்க்கிறேன்” என்றார். விருது பெற்ற அனைவருக்கும், குறிப்பாக தனது அம்மாவுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.
தன் வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொரு வெற்றிக்கும் தாய்தான் காரணம் என்றும், ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து மனிதனாக ஆக்குவது ராணுவப் பணிக்குச் சமமான தியாகம் என்றும் சூரி கூறினார். பெண்களின் உழைப்பை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராம் அவர்களுக்கு விருது வழங்கிய அனுபவத்தையும் பகிர்ந்த அவர், “பொறுப்பு என்பது பதவி மட்டும் அல்ல; அந்தப் பொறுப்பால் எத்தனை பேருக்கு நல்லது நடக்கிறது என்பதுதான் முக்கியம்” என்றார். இறுதியாக, “நான் அதிகம் படிக்கவில்லை என்று பலமுறை வருந்தியிருக்கிறேன். ஆனால் இன்று ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு விருது வழங்கும் நிலைமைக்கு வந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று சூரி உருக்கமாகப் பேசினார்.
