ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் சமீபத்திய பேட்டியில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஏஐ பெரிதும் உதவக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் பிராட் பிட், 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். Fight Club, Seven, The Departed, Inglourious Basterds, Once Upon a Time in Hollywood போன்ற படங்கள் உலகம் முழுவதும் அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கின.
ஏஐ குறித்து பேசிய அவர், “பலர் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் அது ஒரு கருவி மட்டுமே. குறிப்பாக 40 முதல் 90 மில்லியன் டாலர் வரையிலான நடுத்தர பட்ஜெட் படங்களை உருவாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
மேலும், “ஏஐ ஒரு நடிகரைப் போல நடிக்குமா என்பது அதை உருவாக்குபவரைப் பொறுத்தது. கதை சொல்லும் மனிதரின் பார்வை முக்கியம்” என்றும் அவர் கூறினார். சண்டைக் காட்சிகள் மற்றும் வயதை குறைக்கும் தொழில்நுட்பங்களில் ஏஐ ஏற்கனவே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த அவர், “நான் கடந்த 20 ஆண்டுகளாக ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறேன். என் ஒப்பந்தத்தில் ‘நான் உருவாக்கியதால் நானே அதை அழிப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளேன்” என்று சிரிப்புடன் கூறினார்.அவரது இந்த கருத்துகள் ஹாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
