ஜூனியர் என்.டி.ஆர் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் “டிராகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துவருகிறார். இசையை ரவி பஸ்ரூர் அமைக்கிறார். இந்த கூட்டணியின் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக ஜூனியர் என்.டி.ஆரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்தபின், முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில், அவருடைய குழு உடல்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இன்று ஐதராபாத்திலுள்ள KIMS மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
