அருண்ராஜா காமராஜ் – விஷ்ணு விஷாலின் படம் டிராப்… வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை!

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாக இருந்த தனது புதிய திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்தத் திட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியதால், உண்மையை ரசிகர்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக எதிர்பார்த்து வந்ததாகவும், பத்து மாதங்களாக அதற்காக தீவிரமாக தயாராகி வந்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். “கட்டா குஸ்தி 2” படத்திற்குப் பிறகு இந்தத் திட்டத்தை தொடங்க வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருந்ததாம்.

ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் சிக்கல்கள் காரணமாக படத்தை தொடராமல் இருக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். “இந்தத் திட்டத்தை காப்பாற்ற என்னால் முடிந்த முயற்சிகளை செய்தேன். இருப்பினும், தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவு தன்னுக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதானதல்ல என்றும், அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தனது கவனம் “இரண்டு வானம்” திரைப்படம் மற்றும் தனது சகோதரரின் “Yellow Yellow Dirty Fellow” படத்தின் மீது இருப்பதாகவும், விரைவில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாகவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply