நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. தனது கனவுகள் மற்றும் இலக்குகள் குறித்து அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “எனக்கு நானே கொடுத்த 1000 நாள் உறுதிமொழியின் 484வது நாள் இது. இன்னும் நிகழாத வாழ்க்கையை எழுதி வைத்திருப்பதில் ஒரு தனி சக்தி இருக்கிறது. சில இலக்குகள் மிகப் பெரியதாக இருந்ததால், அவற்றை எழுதும்போது எனக்கே சிரிப்பாகத் தோன்றியது. இருந்தாலும் அவற்றை எழுதினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இப்போது திரும்பிப் பார்க்கும்போது, சாத்தியமற்றதாக தோன்றிய பல விஷயங்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டதை பார்க்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளார். கனவுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும், தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் சமந்தா கூறியுள்ளார். “மற்றவர்களுக்கு அது முட்டாள்தனமாகத் தோன்றினாலும், உங்கள் கனவுகளை நீங்கள் நம்ப வேண்டும்” என்ற அவரது வார்த்தைகள் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
