நடிகை பிரிகிடா – நடிகர் ஆனந்த் நிச்சயதார்த்தம்… வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை பிரிகிடாவுக்கும், அவரது காதலரான நடிகர் ஆனந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரிகிடா, விஷால் நடித்த ‘அயோக்யா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் ‘வர்மா’, ‘மாஸ்டர்’, ‘வேலன்’, ‘இரவின் நிழல்’, ‘கருடன்’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ‘மார்கன்’, ‘இட்லி கடை’, ‘ஹாட் ஸ்பாட் 2’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் பகல்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது. அண்மையில் அவர் நடித்த ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி வெளியானது.

நடிகர் ஆனந்த், ‘மீசைய முறுக்கு’, ‘நண்பன் ஒருவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ஆனந்த் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை பிரிகிடா சமூக வலைதள பதிவு மூலம் தனது காதலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட நாள் காதலுக்குப் பிறகு, தற்போது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்த பிரிகிடா தனது சமூக வலைதள பதிவில், “சில நேரங்களில் மிக அழகான காதல் கதைகள் பெரிய திட்டங்களுடன் தொடங்குவதில்லை. ஒவ்வொரு நாளும் மனப்பூர்வமாக ஒருவரையொருவர் தேர்ந்தெடுக்கும் இரு இதயங்களிலிருந்தே அவை தொடங்குகின்றன. இன்று, எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதத்துடன், எங்களை ஒன்றிணைத்த காதலை கொண்டாடும் விதமாக, இரு குடும்பங்களின் பாரம்பரிய முறைப்படி எங்கள் நிச்சயதார்த்தத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.

எங்கள் வாழ்க்கைப் பயணத்தை இவ்வளவு அன்புடன் ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் அனுப்பிய வாழ்த்துகளைப் பார்த்தோம், உங்கள் அன்பை உணர்ந்தோம். அந்த அன்புக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம். இங்கிருந்துதான் எங்கள் ‘என்றென்றும்’ என்ற பயணம் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.பிரிகிடா – ஆனந்த் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading