இந்திய ரசிகர்களைப் புகழ்ந்த கிறிஸ்டோபர் நோலன்

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன், தனது பிரம்மாண்ட திரைப்படமான ‘தி ஒடிசி’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக இந்தியா வந்துள்ளார். மும்பையில் நடைபெற்ற படத்தின் சிறப்புத் திரையிடலில் நோலனுடன், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மேட் டாமன், ‘ஸ்பைடர்மேன்’ புகழ் டாம் ஹாலண்ட் மற்றும் படத்தின் தயாரிப்பாளரும் நோலனின் மனைவியுமான எம்மா தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். திரையிடல் முடிந்ததும் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிறிஸ்டோபர் நோலன், திடீரென “யார் சிறந்த நடிகர், மேட்டா அல்லது டாமா?” என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட ரசிகர்கள் அரங்கமே அதிரும் வகையில் உற்சாகமாக கூச்சலிட்டனர். ரசிகர்களின் வரவேற்பால் மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் சற்று வெட்கமடைந்தனர்.

ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ திரைப்படம் இந்தியாவில் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. போருக்குப் பிறகு தனது தாயகத்திற்குத் திரும்ப போராடும் ஒடிசியஸ் என்ற போர்வீரன் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேட் டாமன், டாம் ஹாலண்ட் ஆகியோருடன் ஆன் ஹாத்வே, ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்திய ரசிகர்கள் குறித்து பேசிய கிறிஸ்டோபர் நோலன், “நான் ஏற்கனவே இந்தியாவில் ‘தி டார்க் நைட் ரைசஸ்’ மற்றும் ‘டெனெட்’ படங்களின் படப்பிடிப்பை நடத்தியுள்ளேன். ஆனால், எனது திரைப்படத்தை இங்கு வந்து முறைப்படி வெளியிடுவது இதுவே முதல் முறை. உலகிலேயே இந்திய சினிமா ரசிகர்கள்தான் மிகவும் துடிப்பான மற்றும் சினிமா அறிவு மிக்கவர்கள்” என பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய மேட் டாமன், நண்பர்களுக்காக ஏற்கனவே ஒரு பிரீமியர் திரையிடல் நடத்தப்பட்டிருந்தாலும், பொதுமக்களுடன் அமர்ந்து படத்தை ரசிப்பது இதுவே முதல் முறை என தெரிவித்தார். மேலும், ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் முழுமையான அனுபவத்தை திரையரங்குகளில், குறிப்பாக IMAX திரையில் பார்க்கும்போதுதான் பெற முடியும் என்றும் கூறினார். டாம் ஹாலண்ட் மைக்கைப் பிடித்ததும் அரங்கில் இருந்த ரசிகர்கள் “ஸ்பைடி, ஸ்பைடி” என உற்சாகமாக முழக்கமிட்டனர். இதற்கு பதிலளித்த அவர், இந்திய ரசிகர்கள் வழங்கும் எனர்ஜியை உலகின் வேறு எங்கும் பார்க்க முடியாது என்றும், அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading