நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இருப்பினும், பல காட்சிகள் மற்றும் வசனங்களில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
CBFC வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 12 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, TVK தொடர்பான குறிப்புகள் நீக்கப்பட்டதுடன், “அம்பேத்கர் சட்டம்” என்ற வசனம் “TVK சட்டம்” என மாற்றப்பட்டுள்ளது. மேலும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இடம்பெறும் புத்தக அட்டை காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்திய தேசியக் கொடி தரையில் விழும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, சில மத மற்றும் அரசியல் குறிப்புகள், ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள், சில முழு வசனங்கள், ஒரு குழந்தை தீயில் எரியும் காட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அடையாள அட்டையுடன் தொடர்புடைய காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘ஷீலா ராணி’ என்ற பெயரும் திரைப்படம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களுக்குப் பிறகு, திரைப்படத்தின் மொத்த நீளம் 3 மணி 3 நிமிடம் 11 விநாடிகள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ், திட்டமிட்டபடி ஜூலை 24-ஆம் தேதி உலகளவில் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
