‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆத்தி ராசாத்தி’ பாடலின் காணொளியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய இந்த பாடல், திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. ஆர்.ஜே. பாலாஜி எழுதி, இயக்கி நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், சுவாசிகா மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதன் காரணமாக திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த திரைப்படம் விரைவில் இந்தி மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சூர்யாவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமாக இது உருவெடுத்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். மேலும், திரைப்படத்தில் நீக்கப்பட்ட சில காட்சிகளையும் இணைத்து, வருகிற ஜூன் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘ஆத்தி ராசாத்தி’ பாடலின் காணொளியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
