நட்டி நடராஜ் நடிப்பில், தம்பி ராமையா கதை எழுதி, உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் ‘டிஎன்2026’. வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. அந்த டீசரில், விஜய்யைப் போன்ற தோற்றத்தில் நட்டி நடித்திருப்பதாகவும், மேலும் விஜயின் அரசியல் வருகையை விமர்சிக்கும் விதமாக படம் உள்ளது என விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதில் எம்.எஸ். பாஸ்கர், “டிஎன்2026 ஒரு அரசியல் சார்ந்த திரைப்படம் தான். ஆனால் இது எந்த ஒருவரின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவில்லை. அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசிக்கவும், சிரிக்கவும் உருவாக்கப்பட்ட படம். இயக்குநர் மிகுந்த திறமைசாலி. நட்டியுடன் இது எனக்கு முதல் படம். ‘சதுரங்க வேட்டை’ படத்திலிருந்து நான் அவரின் ரசிகன். விஜய்யுடனும் நான் முன்னர் நடித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியல் வந்தால் என்ன தவறு? என்றார்.
மேலும் தம்பி ராமையா பேசியபோது, எந்த விஷயத்திலும் யாருடைய மனமும் புண்படக்கூடாது என்று நினைக்கும் மனிதன் நான். இந்த படம் யாரையும் விமர்சிக்கும் படம் அல்ல, சில காட்சிகள் இன்றைய சூழலோடு பொருத்தி போயிருக்கலாமே தவிர, அவதூறு பரப்பும் நோக்கில் இந்த படத்தில் எதுவும் இல்லை. அதனால் இந்தக் கதையை எழுதும்போது கூட, யாரையும் சங்கடப்படுத்தாத வகையில் கவனமாக எழுதினேன். ஒரு குறிப்பிட்ட லுக் பார்த்து தவறாக புரிந்து கொண்டுள்ளனர். என் வயதில் நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியை பார்த்த பின்பு நீங்கள் தான் சரியான தீர்ப்பை வழங்குவீர்கள். 10ஆம் தேதி மக்கள் பார்த்து தங்களது கருத்தை கூறுவார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.
