‘பாகுபலி’ படத்தில் நடிக்க காரணம் என்ன?நடிகர் சத்யராஜ் சொன்ன பதில்!

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் உலகளவில் பெரும் புகழைப் பெற்றார். குறிப்பாக அந்த திரைப்படத்தில் அவர் நடித்த ‘கட்டப்பா’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த கதாபாத்திரம் இந்திய சினிமாவில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சத்யராஜ் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “இயக்குநர் ராஜமவுலி ‘பாகுபலி’ திரைப்படத்தின் கதையை சொல்ல சென்னையில் உள்ள என் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது ஒரு காட்சியில் நான் நடிகர் பிரபாஸின் காலை எடுத்து என் தலையில் வைக்க வேண்டும் என்று கூறினார். அந்த காட்சியை கேட்டபோது முதலில் எனக்கு சிறிது தயக்கம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

அதன்பிறகு அவர் ராஜமவுலியிடம், “முதலில் முழுக் கதையையும் சொல்லுங்கள். கதை எனக்கு பிடித்ததாக இருந்தால் நான் அந்த காட்சியிலும் நடிக்க சம்மதிப்பேன்” என்று கூறியதாக தெரிவித்தார். அதற்கு பதிலாக ராஜமவுலி, “நீங்கள் அந்த காட்சியை எப்படியும் செய்ய மாட்டேன் என்று கூறினால், நான் முழுக் கதையை சொல்ல முடியாது” என்று பதிலளித்தாராம்.

அப்போது சத்யராஜ், ‘திருமால் பெருமை’ திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ஒரு காட்சியை உதாரணமாக கூறியதாக தெரிவித்துள்ளார். அந்த காட்சியில் நடிகர் சிவகுமார் காலில் இருக்கும் மெட்டியை சிவாஜி கணேசன் தனது வாயில் வைத்து கழற்ற முயல்வார். ‘எங்களுக்கு நடிப்பு என்றால் சிவாஜி சார் தான் ஒரு பெரிய முன்னுதாரணம். அந்த காட்சியை நினைவில் வைத்துக்கொண்டு நான் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன். பின்னர் ராஜமவுலி கூறிய முழுக் கதையையும் கேட்டபோது அது எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் நான் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று சத்யராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading