கன்னட தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் தயாரித்துள்ள தமிழ் திரைப்படம் ‘வவ்வல்ஸ்’. ஐந்து தனித்தனி கதைகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி வகை படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். ஒவ்வொரு இயக்குநரும் தனித்தனி கதையை கையாளும் வகையில் திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கான இசையை சரவண சுப்ரமணியம் அமைத்துள்ளார். பல்வேறு உணர்ச்சி பரிமாணங்களை கொண்ட இந்த திரைப்படம் மார்ச் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் கூறுகையில், “இந்தப் படத்தில் ஐந்து விதமான காதல் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் தனித்துவமான கண்ணோட்டத்துடன் சொல்லப்படுகிறது. இன்றைய இளைஞர்களின் மனநிலை, அவர்கள் காதலை அணுகும் விதம், அவர்களின் எண்ணப்போக்கு ஆகியவற்றை நேர்மையாக பிரதிபலிக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த ஐந்து கதைகளில் குறைந்தது ஒன்றையாவது இன்றைய தலைமுறை இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருப்பார்கள். அதனால் இது இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல; இன்றைய தலைமுறையைப் புரிந்துகொள்ள விரும்பும் பெரியவர்களுக்கும் உதவும் படமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
