ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து தனித்தனி கதைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆந்தலாஜி வகையான திரைப்படம் ‘வவ்வல்ஸ்’. இந்தப் படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். திரைப்படம் மார்ச் 13ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து சின்னி ஜெயந்த் பேசியபோது, இந்தப் படக்குழுவினர் மிகவும் தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்துள்ளீர்கள்; தமிழ் சினிமா நிச்சயம் உங்களை கைவிடாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதே உண்மை. ‘கதா சங்கமம்’ என்ற கன்னட திரைப்படத்தில் தான் நான் முதலில் நடித்தேன். அதை புட்டண்ணா கனகல் இயக்கினார். அந்தப் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தை தமிழகத்தில் இந்த விழா நடைபெறும் கமலா தியேட்டரில்தான் பார்த்தேன். பழைய நினைவுகள் மனதில் வந்து விட்டன.
உலக ரசிகர்களில் தமிழக ரசிகர்கள் சிறந்த ரசனை கொண்டவர்கள். புரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ திரைப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடியது; உலகளவில் பெரிய வசூலை இங்கே பெற்றது. நல்ல திரைப்படங்களை தமிழக ரசிகர்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்குநர்கள் இணைந்து பணியாற்றிய ஒற்றுமை வியப்பூட்டுகிறது. இந்தப் படத்தை ஐந்து பாகங்களாக விரிவுபடுத்தலாம். மிகப் பெரிய அறிவாளியான யூகி சேது இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
1980களில் சினிமாவில் நடிப்பது மிகவும் கடினம், வாய்ப்பு எளிதில் கிடைக்காது. ஆனால் ஒரு முறை கிடைத்தால் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க முடியும். இப்போது வாய்ப்புகள் விரைவாக கிடைக்கின்றன. ஆனால் தொடர்ந்து நிலைத்திருக்க ஒழுக்கமும் கடின உழைப்பும் அவசியம். நான் 42 ஆண்டுகளாக நடித்துவருகிறேன். பல படங்களில் காதலுக்கு துணை நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படத்தில் நான் நேரடியாக காதலிக்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்று கூறினார்.
