கடந்த நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 15.92 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்குப் பிறகு, தமிழ் நடிகர் விஜய் 80 கோடி ரூபாயுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
2023-24 நிதியாண்டுக்கான அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலை ‘ஃபார்ச்சூன்’ இதழ் வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்தி திரையுலகப் பிரபலங்கள் அஜய் தேவ்கன் (ரூ.42 கோடி), ரண்பீர் கபூர் (ரூ.36 கோடி), ஹிருத்திக் ரோஷன் (ரூ.28 கோடி), கபில் சர்மா (ரூ.26 கோடி), கரீனா கபூர் (ரூ.20 கோடி), ஷாஹித் கபூர் (ரூ.14 கோடி) ஆகியோர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கியாரா அத்வானி ரூ.12 கோடி, கத்ரீனா கைஃப் ரூ.11 கோடி வரி செலுத்தியுள்ள நிலையில், குணச்சித்திர நடிகர் பங்கஜ் திரிபாதி ரூ.11 கோடி வரி செலுத்தியுள்ளார். அத்திரையுலகின் முன்னணி நடிகர் அமீர் கான் கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடி மட்டுமே வரி செலுத்தியுள்ளார்.
தென்னிந்திய நடிகர்கள் மோகன்லால், அல்லு அர்ஜுன் ஆகிய இருவரும் தலா ரூ.14 கோடி வரி செலுத்தியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ரூ.38 கோடி வருமான வரி செலுத்தி, ஒட்டுமொத்த பட்டியலில் 7வது இடத்திலும் கிரிக்கெட் வீரர்களிடையே 2வது இடத்திலும் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி ஆகியோர் முறையே ரூ.28 கோடி, ரூ.23 கோடி வரி செலுத்தி பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடி மற்றும் ரிஷப் பந்த் ரூ.10 கோடி வரி செலுத்தியுள்ளனர்.