மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலை அனுமதி இல்லாமல் படக்குழு பயன்படுத்தியதாக இளையராஜா மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான சக்கைப்போடு போட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மஞ்சும்மல் என்கிற கிராமத்தில் இருந்து 11 பேர் கொண்ட நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகையை பார்க்கின்றனர். அந்த குகையின் அழகைப் பார்த்து வியந்து போன நண்பர்கள் புகைப்படம் எடுப்பதற்காக தடையை மீறி செல்கின்றனர். அப்போது, ஒரு பள்ளத்தில் நண்பன் சுபாஷ் விழுந்துவிட, அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகின்றனர். அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.
இந்நிலையில், இளையராஜா தரப்பு, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இளையராஜா இழப்பீடாக கேட்ட 2 கோடி ரூபாயில், 60 லட்சம் ரூபாயை கொடுக்க படத்தின் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதால், குணா பாடல் பஞ்சாயத்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் முடிந்துவைக்கப்பட்டது.