தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் செல்வராகவன். வித்யாசமான படைப்புகளின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘7G ரெயின்போ காலனி’ ஆகிய படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவாகியுள்ளார்.
மேலும், அவர் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வெளியான போது வெற்றிபெறவில்லை என்றாலும், இன்று அனைவராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. செல்வராகவன், கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பிறகு, முழுநேர நடிகராகவே மாறி, ‘பீஸ்ட்’, ‘பகாசுரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில், தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இதனால், இயக்குநராக இருந்த அவரது ரசிகர்கள் சிலமட்டும் ஏமாற்றத்தில் இருந்தனர். செல்வராகவன் மீண்டும் எப்போது படங்களை இயக்கப் போகிறார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து, அவர் தற்போது மீண்டும் படங்களை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மேலும், இனி படங்களில் நடிப்பதையும் நிறுத்தப்போவதாகவும், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் இனி தான் படங்களில் நடிக்கப் போவதில்லை என செல்வராகவன் கூறிவருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இருப்பினும், செல்வராகவன் தற்போது ‘புதுப்பேட்டை 2’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போன்ற கதைகளை தயார் செய்து வருகிறார்.