தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ராயன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தற்பொழுது, தனுஷ் ‘குபேரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக், அருண் மாதேஸ்வரனுடன் ஒரு படம், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் என பல படங்களில் நடிக்கவுள்ளார்.
இவை தவிர, போர்த்தொழில் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும், உலகப் புகழ் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்’ தொடரின் அடுத்த படம் ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே’ உருவாகுகிறது. இதனை ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்குகிறார்கள்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு முக்கியமான பாத்திரம் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதே படத்தில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே, ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.