2001ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். அதன்பின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு” போன்ற வெற்றிப் படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரையில் 20 படங்களை இயக்கியுள்ளார் கவுதம். தமிழில் அவர் வைக்கும் தலைப்புகள் கவிதை நடையில் இருக்கும் எனப் பாராட்டுபவர்கள் அதிகம். தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தனது தாய்மொழியான மலையாளத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
மம்முட்டியின் படத் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் ஆறாவது படத்தை கவுதம் மேனன் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று கொச்சியில் நடைபெற்றது. அதில் கவுதம், மம்முட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. கவுதம் கடைசியாக தமிழில் இயக்கிய “துருவ நட்சத்திரம் படம் நிதிச்சிக்கலில் சிக்கி இன்னும் வெளியாகாமல் உள்ளது கவனிக்கத்தக்கது.