“இதயத்தை திருடாதே” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா. கடந்த 35 ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தி வரும் நாகார்ஜுனா, ஆக்ஷன் மற்றும் காதல் படங்களில் மட்டுமல்லாமல், ஆன்மிகப் படங்களிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நாகார்ஜுனாவின் 65வது பிறந்தநாள். இதை கொண்டாடும் விதமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்’ திரைப்படம் 4K வடிவில் டிஜிட்டலாக மாற்றப்பட்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி மறுதியக்கத்துடன் வெளியிடப்பட உள்ளது.
இந்த தகவலை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடன இயக்குனராக இருந்து, நடிகராக மாற்றம் பெற்று சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சமயத்தில், ராகவா லாரன்ஸ் இயக்கிய இப்படம், அவருக்கு ஒரு கமர்ஷியல் இயக்குனராக பெயரைப் பெற்றுக் கொடுத்தது. நாகார்ஜுனாவின் திரையுலகப் பயணத்தில் ‘மாஸ்’ மிக முக்கியமான படமாகும். இதில் ஜோதிகா கதாநாயகியாகவும், ரகுவரன் வில்லனாகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.