சமீபத்தில் துபாயில் நடைபெற்ற குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் அவர் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், “எனக்கு தென்னிந்தியாவில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், யாஷ், மகேஷ் பாபு, விஜய், ரஜினி சார், கமல் சார் போன்றவர்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது. நீங்கள் இவ்வளவு வேகமாக நடனமாடுவதை நிறுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்ந்து போட்டிப்போட்டுக் கொண்டே நடனமாடுவது எனக்குக் கடினமாக இருக்கிறது,” என்று சிரித்துக்கொண்டே உரையாற்றியுள்ளார்.
மேலும், ஷாருக்கான் தொடர்ந்து பேசியதாவது, “என் அடுத்த படமான ‘கிங் வித் பதான்’-க்கான படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் மிகவும் கண்டிப்பானவர். படம் தொடர்பாக வெளியே பேச வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார். எனவே நான் இதற்கும் மேலாக தகவல்களை உங்களுடன் பகிர முடியாது. ஆனால் அந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என முழுமையாக உறுதியளிக்கிறேன்,” என அவர் கூறியுள்ளார்.