நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “ஜெயிலர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, சூப்பர் ஹிட் அடித்தது. படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
தமிழில் ரஜினிகாந்த் மாஸ் காட்டிய நிலையில், நெல்சன் திலீப்குமார் இந்த படத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களை இணைத்திருந்தார். இதுவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சிவராஜ்குமார் படத்தில் சில நிமிடங்களே தோன்றியிருந்தாலும், அவர் அதிகம் ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிகளை தாண்டி வசூலித்து மாஸ் காட்டியது. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், இந்த வெற்றியை படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடியது.
இந்த படத்தின் தொடர்ச்சியாக “ஜெயிலர் 2” படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த மாதத்தில் நெல்சன் திலீப்குமார் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளதாகவும், படத்திற்கு “ஹுகும்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படக்குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.