பிரபுதேவா கடைசியாக நடித்து வெளியான ‘பேட்ட ராப்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வர்த்தக ரீதியாகவும் பெரிய அளவிலான வசூலினை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய நகைச்சுவை திரைப்படமான ‘ஜாலியோ ஜிம்கானா’ வில் பிரபுதேவா நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘போலிஸ் காரனா கட்டிக்கிட்டா’ பாடல் ஆண்ட்ரியாவின் குரலில், இரட்டை அர்த்தம் கொண்ட வரிகளுடன் வெளியிடப்பட்டது. இதை ரசிகர்கள் நல்ல வரவேற்புடன் ஏற்றுக்கொண்டனர். இந்த பாடலின் வரிகளை எழுதியவர் சினிமா பத்திரிகையாளரான ஜெகன் ஆவார். ஆனால், இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் பாடல் வரிகளை எழுதியவர் என்று இயக்குநர் சக்தி சிதம்பரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையில் ‘ஜாலியோ ஜிம்கானா’ படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து படம் தொடர்பாக பேசினர். நிகழ்வின் போது, பாடலாசிரியர் ஜெகனின் பெயர் விடுபட்ட விவகாரம் குறித்து இயக்குநர் சக்தி சிதம்பரத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கடுப்படைந்த இயக்குநர் எந்த பதிலும் அளிக்காமல் அரங்கத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் பிரபுதேவா பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி, ஜெகனை மேடையேறச் சொல்லினார். இதனால் அரங்கில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. மேடையேறி பேசிய ஜெகன், “இந்தப் படம் தொடக்கத்தில் 8 கோடி ரூபாய் பட்ஜெட் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் படத்துக்காக 15 கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டியதாகி விட்டது. இதுதொடர்பாக, தயாரிப்பாளரிடம் சில விஷயங்களை நான் எடுத்துக்காட்டினேன். இதனால் இயக்குநர் சக்தி சிதம்பரம் கோபமடைந்தார். அப்போது அவர், ‘ஜெகனின் பெயரை பாடலுக்கு போடமாட்டேன்’ என்று தயாரிப்பாளரிடம் சொல்லி விட்டார். எனினும், எங்கள் தயாரிப்பாளர், ‘ஜெகன் வளர்ந்து வரும் ஆளாக உள்ளார்; அவர் பெயரை பாடலில் சேர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்” என்று கூறினார்