சூரி கோலிவுட்டின் முக்கியமான நகைச்சுவை நடிகர். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ஹீரோவாக தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளை பெற்றார். மேலும் சண்டை காட்சிகளில் ரிஸ்க்கையும் எடுத்திருந்தார் சூரி, இது அவருக்கு மிகுந்த பாராட்டுகளை பெற்றுத்தந்தது. விடுதலை படத்தில் அவரது நடிப்பை பார்த்த பலரும் சூரி இனி ஹீரோவாகவே தொடரலாம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
பல ரசிகர்களின் கருத்துப்படி சூரி தற்போது ஹீரோவாகவே நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்கள் வரவிருக்கின்றன. மேலும், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சூரி. இந்தப் படங்களை தொடர்ந்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்திலும் நடித்துள்ளார். இதில் சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டுக்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் துரை செந்தில்குமார் அளித்த பேட்டியில், “அதிகாரம் என்ற கதையினை வெற்றிமாறன் எனக்கு கூறியுள்ளார். நான் அந்தப் படத்துக்கான திரைக்கதை வேலைகளில் தற்போது இருக்கிறேன். ஆனால் கருடன் படத்தின் கதை வெற்றிமாறனின் கதை இல்லை என்பதை தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்றார்.
இந்த படத்தின் கதைக்கான ஐடியாவை சூரிதான் முன்மொழிந்தார். அந்த ஐடியாவை நானும் என்னுடைய உதவி இயக்குநர்களும் சேர்ந்து எழுதினோம். படத்தின் தயாரிப்பாளருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஒரு ப்ரோமோஷன் காரணமாக இந்தப் படத்தின் கதையாசிரியர் பெயரில் வெற்றிமாறனின் பெயரை பயன்படுத்த முடிவு செய்தோம். வெற்றிமாறனும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அவர் சில ஆலோசனைகளை மட்டுமே வழங்கியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.