ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தில் அரசியல்வாதியாக இருக்கும் கவுண்டமணி, தனது மூன்று தங்கைகளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் திருமணம் செய்ய திட்டமிடுகிறார். ஆனால், அவரது சகோதரிகள் தங்களுக்கு விருப்பமான மூன்று பேரை ஒரே குடும்பம் எனக் கூறி பெண் கேட்க வருமாறு செய்கிறார்கள். இதற்கிடையில், பத்திரிகையில் வெளியான ஒரு விளம்பரத்தைக் கொண்டு சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் திருட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கமுத்துவும் பெண் கேட்க வருகிறார்.
இந்த நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கட்சி சார்பில் போட்டியிட கவுண்டமணிக்கு சீட் கிடைக்காததால், அவர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்கிறார். கட்சி சார்பில் யோகி பாபுவை வேட்பாளராக நிறுத்துகிறார்கள். அதோடு, ஆளுங்கட்சி அமைச்சராக இருக்கும் ஓ.ஏ.கே. சுந்தர், தனது அரசியல் எதிரியாக உள்ள கவுண்டமணியை தோற்கடிக்க ரவி மரியாவை வேட்பாளராக நிறுத்துகிறார். பரபரப்பாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது யார்? கவுண்டமணி தனது திட்டமிட்டபடி தங்கைகளுக்கு திருமணம் நடத்தினாரா? என்பதே மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி கதையின் நாயகனாக, அரசியல்வாதியாக நடித்து இருக்கிறார். ஆனால், படம் பார்க்கும்போது அவர் மீண்டும் எந்த படத்திலும் நடிக்காமல் இருப்பது அவருக்கும், ரசிகர்களுக்கும் நல்லது என்பதே புரிகிறது.

தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளராக நின்று ஒரே ஒரு ஓட்டும் வாங்காததால், அவரை “ஒத்த ஓட்டு முத்தையா” என்ற அரசியல் அடைமொழியுடன் அழைக்கிறார்கள். பழைய பஞ்ச் வசனங்கள் இருந்தாலும், அவை படத்தில் சரியாக அமையவில்லை. இந்த வயதிலும் அவருக்காக ஆக்ஷன் காட்சிகள் சேர்த்திருப்பது, இயக்குநரின் பெரிய தவறாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்கள் படத்தில் இருந்தும், நகைச்சுவை சரியாக அமையவில்லை. பல வெற்றிகரமான காமெடி படங்களுக்கு வசனம் எழுதிய சாய் ராஜகோபால் இப்படத்தை இயக்கியிருந்தாலும், காமெடி சரியாக செயல்படவில்லை என்பது பெரிய ஏமாற்றம். ஒருசில காமெடி காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படியாக இருந்தன. அதோடு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டு காட்சியாக மாற்றி, அரசியல் சம்பவங்களை கலாய்த்து காட்டியிருப்பது சுவாரஸ்யமாக ரசிக்க வைக்கும்படி இருக்கிறது.