யோகி பாபு காமெடியனாகவும் ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றிகரமாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் ஹீரோவாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதே போல, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி டிராக்கில் பயணிக்கவும் யோகி பாபு தயக்கம் காட்டவில்லை.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி யோகி பாபு – சிம்புதேவன் காம்பினேஷனில் உருவாகியுள்ள போட் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்று வரும் யோகி பாபு, தன்னுடைய படம் மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரசியமான விஷயங்களையும் பேசி வருகிறார்.
போட் படத்திற்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வரும் யோகி பாபு, சூரி குறித்தும் அவரது அசுர வளர்ச்சி குறித்தும் தனது பேட்டியில் பேசியுள்ளார். தாங்கள் நடிக்க வந்த துவக்க காலத்திலேயே நண்பர்களாக பழகியதாகவும், தன்னுடைய மண்டேலா படம் பார்த்து சூரி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்ததாகவும், அதே போல விடுதலை மற்றும் கருடன் படங்களில் சூரியின் நடிப்பை பார்த்து தான் மிரண்டதாகவும், இதை தான் அவரிடம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் யோகி பாபு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.