’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைத்த, கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம், செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் டிரைலர் யு டியூபில் வெளியிடப்பட்டது.
இயக்குனர் பிரேம் குமாரின் முதல் படமான ’96’ல் பிரிந்து போன காதலைப் பற்றி பேசியது, இந்தப் படத்தில் பிரிந்த உறவுகளைப் பற்றி சொல்ல உள்ளார் என்பது தெளிவாகிறது. தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி எங்கோ சென்ற அரவிந்த்சாமி, மீண்டும் தனது கிராமத்திற்கு வந்து உறவுகளை சந்திக்கும் கதை போன்றே இந்த படத்தின் கரு இருக்கலாம் என டிரைலர் உணர்த்துகிறது.

கதையின் பிண்ணனி பார்த்தோம் என்றால் தஞ்சாவூர் பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகி இருப்பதை டிரைலரின் முதல் காட்சியே காட்டுகிறது. தஞ்சைப் பெரிய கோயிலின் பின்னணியில் ஓடும் ரயில் காட்சியோடு தொடங்கி, கார்த்தி பேசும் ‘எல்லாம் நாம கடந்து வந்த பொற்காலம்’ என்ற வசனத்துடன் டிரைலர் முடிவடைகிறது. இதை முழுவதும் உறவுகளின் உணர்ச்சிகள், பாசம், துன்பம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டதாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அரவிந்த்சாமி, கார்த்தி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், அவர்கள் படம் வெளியான பிறகு நம் மனதில் ஆழமாக இடம் பிடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையுடன், கமல்ஹாசன் பாடிய ‘யாரோ இவன் யாரோ’ பாடல் நெஞ்சை உருகவைக்கும். ’96’ படத்தின் “ராம், ஜானு” போலவே, ‘மெய்யழகன்’ படத்தில் “அத்தான், மச்சான்” கதாபாத்திரங்களும் நம் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.