‘அம்மா அம்மம்மா’, ‘தரிசு நிலம்’, ‘மிஸ்டு கால்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.வி.எம். ரகு. தற்போது இளம் தலைமுறையினருக்கு இசை பயிற்சி அளித்து வரும் அவர், திரைப்படப் பாடல்களில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது தவறு என்றுள்ளார்.

இந்நிலையில் ஏ.வி.எம் ரகு பேசுகையில்,சமீப காலமாக திரைப்படப் பாடல்கள் மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதில்லை. அப்படி இருக்கையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை இசையில் பயன்படுத்தும்போது, பாடல்களின் தரம் மிகுந்த அளவில் குறைகிறது. இப்படியான பாடல்களில் உயிர் இல்லாமல் போகிறது. அதனால், அவை மக்கள் மனதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் போன்ற மாபெரும் இசையமைப்பாளர்களின் பாடல்கள் இன்னும் உயிருடன் பேசப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களது சொந்த திறமையும் தனித்துவமும் கொண்டு இயற்றியதால் தான். எனவே இப்போதைய இசையமைப்பாளர்கள், தயவுசெய்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாதீர்கள். அதை பயன்படுத்தினால் மூளை சோம்பி விடும். அதற்கு பதிலாக தங்களது சொந்த கற்பனையைப் பயன்படுத்தி மெட்டுகளை அமைத்து, மக்களின் பாராட்டைப் பெறுங்கள்” என்றார்.