இந்தியாவின் மிக பிரபலமான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இன்றும் பல மொழிப் படங்கள் மற்றும் ஆல்பங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர், கிராமி, அகாடமி, கோல்டன் குளோப், தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், நேற்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக, அவரது சகோதரி பாத்திமா அளித்த தகவலில், “தொடர்ச்சியான பயணங்களால் ரஹ்மான் அதிகமாக சோர்வடைந்திருந்தார். அதனால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. கவலைப்பட வேண்டியதில்லை,” என்று தெரிவித்தார்.
தற்போது அவர் உடல்நலம் தேறி, நேற்று காலை 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால், தொடர்ச்சியான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.