தமிழ் சினிமாவைச் சேர்ந்த அட்லி, ஷாரூக்கான் நடித்த “ஜவான்” படத்தை இயக்கி 1000 கோடி வசூல் செய்தார். அதற்குப் பிறகு அவர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று தகவல் வந்தது. ஆனால், அல்லு அர்ஜூன் கதையில் சில மாற்றங்களை கேட்கவே, இந்த கூட்டணி ஆரம்பத்திலேயே முடிந்து விட்டது. இதைத் தொடர்ந்து, அட்லி சல்மான் கானை சந்தித்து கதை சொல்லி, சல்மானுக்கு பிடித்து இந்த கூட்டணி உருவாகும் என்று தகவல் வெளியானது.
அதன்பின், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்காக கமல்ஹாசனை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கமல்ஹாசன் அந்த கதையை விரும்பி நடிக்க சம்மதித்துள்ளார் என்பது சமீபத்திய தகவல்.
அக்்டோபர் முதல் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி, 2025 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சல்மான் கான், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் “சிக்கந்தர்” படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் “தக் லைப்” படத்தில் நடித்து வருகிறார், அதன்பின் “இந்தியன் 3” படத்திற்காக சில வாரங்கள் நடிக்க உள்ளார். அதனை முடித்த பின், ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடித்து கொண்டே அட்லி படத்திலும் நடிக்க முடியும். இந்த படம் 2025ம் ஆண்டு பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.