அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தயாரிப்பாளர் உறுதியாக அறிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
இப்போது வரை படத்தின் 40% காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளன. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போதே ‘பொங்கல் 2025 வெளியீடு’ என்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தாமதம் மற்றும் பல்வேறு குழப்பங்களால் தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே, நவம்பர் அல்லது டிசம்பரில் தான் படம் வெளியிடப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரே மாத கால இடைவெளியில் அஜித் நடித்துள்ள மற்றொரு படத்தை வெளியிடுவது சாத்தியமில்லையென்ற கருத்து பரவி வந்தது. ஆனால், இந்த கருத்தை மறுக்கும் விதமாக, ஹைதராபாத்தில் நடந்த ‘மதுவடலரா 2’ படவிழாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரவிசங்கர், “‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழில் பொங்கலுக்கு வெளியாகும். அதே நேரத்தில் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்,” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், அஜித் நடித்த 2 படங்களும் 2 மாத இடைவெளியில் வெளியிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. விரைவில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.