ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் இந்த அதிரடி ஆக்ஷன் படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்துடன் இதுவரை இணைந்து நடித்திராத பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். பஹத் பாசில், ரஜினியுடன் முழு படத்தில் பயணிக்கும் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மஞ்சு வாரியர் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார் என உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் அவர் நடித்துள்ள “புட்டேஜ்” படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மஞ்சு வாரியர் இதை கூறியுள்ளார்.
உச்சகட்டத்தில் இருந்த காலகட்டங்களில் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க முடியாத சீனியர் நடிகைகள் சிம்ரன், திரிஷா, ஈஸ்வரி ராவ் போன்றவர்கள் கடந்த சில வருடங்களாக அவருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற நிலையில், தற்போது மஞ்சு வாரியரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.