சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமாக “கூலி” உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை போஸ்டர்களின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதன்படி, “கூலி” படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை சுருதி ஹாசன், மலையாள நடிகர் சவுபின் சாஹிர், நடிகர் சத்யராஜ், நடிகர் உபேந்திரா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு, அவர்களின் கதாபாத்திரப் பெயர்களை வெளியிட்டுள்ளது. இவற்றில், “தேவா” என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். அந்தப் போஸ்டரில் ரஜினியின் கையில் இருந்த பேட்ஜில் “1421” என்ற எண் உள்ளது. இந்த எண்ணுக்கு அனைத்து தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தப் படம் முழுவதுமாக தங்க கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. அதில் “14” மற்றும் “21” என்பது தங்கத்தின் கேரட் மதிப்புகளை குறிப்பதாக தெரிகிறது. 14 கேரட் என்பது இந்தியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் தரத்தை குறிக்கிறது. 21 கேரட் என்பது சவுதி மற்றும் அமீரக நாடுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் தரத்தை குறிக்கின்றன. அமீரக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதால் இந்த எண் இடம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.