பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா குமார். தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இந்த தொடரில் நடித்த பிறகு, அவரது புதிய பட வாய்ப்புகளை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். பிரியங்கா குமார், ஏற்கெனவே “அதுரி லவ்வர்” மற்றும் “ருத்ர கருட புராணம்” ஆகிய தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அவர் தனது 3வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இம்முறை அவர் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் பிரியங்காவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர் மன்சோரே இயக்கவுள்ள இப்படத்தில், பிரியங்கா புல்லாங்குழல் கலைஞராக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது இலக்கு எப்போதும் சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு செல்வதே. அதை நான் இப்போது அடைந்துவிட்டேன். இப்படத்திற்காக மைசூருவைச் சேர்ந்த இசைக்கலைஞர் பாலுவின் வழிகாட்டுதலின் கீழ் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொள்வதற்கு, உறுதியான நடிப்பை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறேன். இசைக்கருவியில் தேர்ச்சி பெறுவது ஒரு பயணம். இதில், மூச்சுக் கட்டுப்பாடு நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும். ஆனால் பயிற்சி செய்வதால் அது சவாலாக இருக்காது என்று நம்புகிறேன், என்று தெரிவித்துள்ளார்.