Saturday, September 14, 2024

மகாராஜா படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

சென்னை கே.கே.நகர் பகுதியில் சலூன் கடை நடத்தும் மகாராஜா (விஜய் சேதுபதி) தனது மகள் ஜோதியுடன் (சச்சினா நெமிதாஸ்) பள்ளிக்கரணை பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் அவர் காவல் நிலையம் சென்று, தன் வீட்டிலிருந்த ‘லட்சுமி’ திருடு போய்விட்டதாகவும், ஸ்போர்ட்ஸ் கேம்பிற்குச் சென்றிருக்கும் மகள் ஜோதி திரும்ப வருவதற்குள் காவல்துறை லட்சுமியைக் கண்டறிந்து தரவேண்டும் எனவும் வேண்டுகிறார். காவல்துறையினர் மகாராஜாவுக்கு உதவினார்களா, உண்மையில் மகாராஜாவின் வீட்டில் நடந்தது என்ன, அவர் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் கும்பலுடன் எவ்வாறு தொடர்பு கொண்டார் என்பதே இந்தக் கதையின் மையம்.

விஜய் சேதுபதி, சிரிக்காத முகம், மகளுக்காக எதையும் செய்வதற்கும் தயாரான தந்தை, லட்சுமியின் கதையை விவரிக்கும் போது வெளிப்படும் உணர்ச்சிகளை கையாள்கிறார். தடுமாற்றத்துடனும் தளர்வான நடையுடனும் வாள் வீசும் தருணம், க்ளைமாக்ஸ் காட்சியில் எதிரியைப் பார்க்கும் தருணம் ஆகியவை அவரது நடிப்பின் மேன்மையை வெளிப்படுத்துகின்றன. சச்சினா நெமிதாஸ், குழந்தை நட்சத்திரமாக மிகுந்த உணர்வுபூர்வமான இடங்களில் தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

திருடும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது, கூட்டாளிகளின் பாலியல் குற்றங்களை கண்டுகொள்ளாதது போன்ற காட்சிகளில் அனுராக் காஷ்யப் கொடூர வில்லனாகவும், எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்துகொண்டே தனது குழந்தைக்காக எதையும் செய்யும் தந்தையாகவும் நடித்து அசத்துகிறார். அவரின் குரல் ஒலிப்பதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்ஸ்பெக்டராக வரும் நட்டி சரியான மற்றும் தவறானதை எளிதில் அறிய முடியாத கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாள்கிறார்.’பாய்ஸ்’ மணிகண்டனுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் புதிய பரிமாணம் கிடைத்தாலும் பெரிதாக பங்கு இல்லை. சிங்கம் புலி, அருள்தாஸ், முனிஸ்காந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். அபிராமி தன் கணவனின் உண்மையை அறியும் காட்சியில் தனது உணர்ச்சிகளை மிகுத்து வெளிப்படுத்துகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜாவுக்கு பெரிதாக வேலை இல்லை.

“அடுத்து என்ன?” என்ற கேள்வியோடு நகரும் திரைக்கதையின் வேகத்தை பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை வலுப்படுத்துகிறது. வைரமுத்துவின் வரிகளில் ஒரே ஒரு பாடல் படத்தில் வந்தாலும் கதையைத் தொந்தரவு செய்யவில்லை. ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இடைவேளைக்கு முந்தைய இடத்தில் மிரட்டலான சண்டைக் காட்சியை வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் நுணுக்கமான ஒளியுணர்வுடன் சேர்ந்து அது மாயாஜாலம் செய்துள்ளது. அவரது அழுத்தமான பிரேம்களுக்கு, எளிதாக சவரக் கத்தியால் வெட்டு போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.

படம் எளிமையான வழியில் சென்றிருந்தால், அடுத்து என்ன என்பதைக் கணிக்கமுடியாத சாதாரணமான படமாக இருந்திருக்கும். ஆனால், தன் நான்-லீனியர் பாணியில் படமாக்கிய விதத்தில், திரைக்கதையினை ‘மகாராஜா’ என உயர்த்திருக்கிறார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். இடைவேளையில் சூடுபிடிக்கும் படத்தின் வேகம், இரண்டாம் பாதியில் சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறது. இப்படியொரு திரைக்கதை அமைத்து, அதற்கேற்றவாறு காட்சிகளைச் சுவாரஸ்யமாக அமைத்தற்க்கே சல்யூட்… நிச்சயமாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் “மகாராஜா”!

- Advertisement -

Read more

Local News